Friday, 25 January 2019

சங்க இலக்கியத்தில் மனித நேயம்--


மனிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத்துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்களின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.
மனிதன் சக மனிதனை நேசிக்கிற-சக மனிதன் துன்பம் போக்கி வாழ்கின்ற மனித நேயத்துக்கும் அப்பால், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுகின்ற-எல்லா உயிர்களின் துன்பம் போக்குகின்ற உன்னதமான வாழ்க்கை நெறியைச் சங்ககாலம் காட்டுகிறது.
பெரிய வள்ளல் என்று இன்றும் போற்றப்படுகின்ற பாரிவள்ளல் மனிதர்களிடம் மட்டுமா அன்பு காட்டினான்? அவனுடைய அன்பு, வாடிய முல்லைக் கொடியிடம் கூட சென்றதே! படரக் கொடியின்றி வாடிய முல்லைக் கொடி படர, தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்து வந்த பாரியின் மனம், சகல உயிர்களையும் நேசித்த உணர்வு மிக்கதல்லவா! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் முன்னோடி பாரிதான்! பாரியைப் போலவே பெரிய வள்ளலாக, சங்க காலத்தில் வாழ்ந்தவன் பேகன். அவனும் புலவர்களையும் இரவலர்களையும் நேசித்ததோடு, அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டினான்.
மனிதனின் வாட்டத்ததைப் போக்கிய மன்னன் பேகன், குளிரால் வாடிய மயிலுக்கு உயர்ந்த போர்வையைப் போர்த்தினான். இவனும், எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கிய வடலூர் வள்ளலாரின் முன்னோடியே! குறுங்குடி மருதனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்று எண்ணத்தக்கது. தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, 'கார்காலம் வந்துவிட்டது தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி, தலைவனின் நல்ல மனதைக் கூறுவதில் சங்ககால மனித உணர்வைக் காணலாம்.
''பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்''

(அகநா-4)

பூத்த சோலையில் தம் துணையோடு தேனில் திளைத்து மகிழும் வண்டினங்கள், மணியொலி கேட்டு பயந்து, கலைந்து சென்று விடுமோ என்று கருணையோடு எண்ணி, தன் தேர் மணிகளின் நாவை ஒலிக்காத வண்ணம் கட்டி, தேரைச் செலுத்துபவனாம் தலைவன். பலநாள் பிரிந்து கிடந்து, வாடும் தலைவியைக் காண விரைந்து வரும் வேளையிலும், வண்டினங்கள் மகிழ்வைச் சிதைத்துவிடக் கூடாதே என்று நினைத்த உள்ளம் சங்ககாலச் சமுதாயப் பண்பைப் பிரதிபலிப்பதாகும்.
எவ்வுயிர்க்கும் தன்னால் துன்பம் நேர்ந்துவிடக் கூடாது என்பதையும், எவ்வுயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்பதையும் குறுங்குடி மருதனார் இக் காட்சியின் மூலம் உணர்த்துகிறார். சீத்தலைச் சாத்தனார் பாடிய அகப்பாடல் ஒன்றும் நினைக்கத்தத்தது. காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், தன் பணி முடித்துக் குதிரை பூட்டிய தேரில் திரும்பும் போது, தன் பாகனுக்கு உரைத்ததில் காணப்படும் அன்புணர்ச்சி கற்றோர் நினைவை விட்டு அகலாதது.


''வாஅப் பாணி வயங்குதொழில் கலிமாத்

தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க
இடமறந் தேமதி வலவ குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணைநிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே''
(அகநா-134)

காதலியை விரைவில் காண வேண்டும் என்று வரும் வழியில், ஆண்மானும் பெண்மானுமாய்க் கூடி மகிழ்ந்திருப்பதைக் கண்ட தலைவன், தேரொலி கேட்டு அவைகள் கலைந்துவிடும் என்று எண்ணி, குதிரையைச் சாட்டையால் அடித்து ஓட்டாது மெல்ல நடத்திச் செல்க என்று பாகனுக்கு உரைக்கிறானாம். மனித நேயத்தையும் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டும் தலைவனின் உயர்ந்த நெறியைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.

No comments:

Post a Comment