தமிழ்நாடு
பழங்கால தமிழ் பௌத்த நூலான மணிமேகலையைக் காவிரி பூம்பட்டினத்தைத் தளமாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் இயற்றினார்.
இன்றைய பல்லவனேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட அக்கால நகர இடிபாடுகளில் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மடாலயம், புத்தர் சிலை, புத்தபீடம் (புத்தர் பாதம்) ஆகியவற்றின் எச்சங்கள் கிடைத்தன.
நாகப்பட்டினம் நகரில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மிய வரலாற்று எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு அசோகரால் கட்டப்பட்ட புத்த விகாரை இருந்ததற்கான ஆதாரமாக இது விளங்குகிறது.நாகப்பட்டினம் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் பௌத்த மையமாக இருந்தது. அக்காலக் கட்டத்தில் அங்கு தாது கோபுரம் இருந்தது. ஆனால் பின் வந்த காலத்தில் இங்கிருந்து அது மறைந்துவிட்டது. ஆனால் மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் தழைத்தது. (எச்.பி.ராய், தி வின்டஸ் ஆப் சேஞ்ச், தில்லி 1994, பக்கம். 142) 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் ராஜராஜ சோழனின் உதவியுடன் சூடாமணி விகாரையை சாவக மன்னனான ஸ்ரீவிஜய சூளாமணிவர்மன் புதுப்பித்துக் கட்டினார்குலோத்துங்க சோழனின் "அணிமங்கலம் செப்பேட்டில்" புத்தத் துறவியான “காசிப தேரர்” நாகநாட்டு புத்தத் துறவிகளின் உதவியுடன் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயிலை புதுப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த "நாகர் அன்னம் விகாரை" பிற்காலத்தில் நாகனவிகாரை என அழைக்கப்பட்டது. இங்கு பௌத்தம் 15 ஆம் நூற்றாண்டுவரை தழைத்தோங்கி இருந்தது, விகாரையின் கட்டடங்கள் 18 ஆம் நூற்றாண்டுவரை இருந்தன.
காஞ்சிபுரம் தென் இந்தியாவின் பழைய நகரங்களில் ஒன்று ஆகும். இந்நகரத்தில் தமிழ், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டன. இந்நகரத்திற்கு யுவான் சுவாங் வந்ததாக கருப்படுகிறது. இவர் இந்த நகரத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் வந்தார். மேலும் இந்த நகரம் ஆறு மைல் சுற்றளவு கொண்டதாக இருந்தது என்றும், இந்த மக்கள் வீரத்துக்கும் பக்திக்கும் பெயர் பெற்றவர்களாக இருந்தனர் என்றும், மேலும் நீதியை விரும்புபவர்களாகவும், பிறருக்கு மரியாதை தருபவர்களாகவும், கற்றல் மிக்கவர்களாகவும் இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார். கௌதம புத்தர் இந்த இடத்துக்கு வந்துள்ளார் எனவும் கூறியுள்ளார். இந்நகரம் பல்லவர்களின் ஆட்சிக் காலமான நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை தலைநகராக புகழ்வாய்ந்ததாக இருந்தது. மேலும் பிரபலமான பல கோயில்கள் இவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன. தமிழ் மரபில் பிறந்தவரும் சென் புத்தமதத்தின் நிறுவனருமான போதி தருமன் இங்கு பிறந்தவர்,பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஒரு பெரிய கல்வியாளராகவும், இசைக்கலைஞராகவும் இருந்தார். இவர் ஒரு அறிஞராகவும் மற்றும் சமஸ்கிருத நகைச்சுவை நாடக ஆசிரியராகவும் இருந்தார்.
யாழ்ப்பாண தீபகற்பம்
சில வரலாற்று ஆவணங்களில் யாழ்ப்பாண தீபகற்பம் நாக தீவு/ நாக நாடு என குறிப்பிடப்படுகிறது. இங்கு வாழ்ந்த மக்களுக்கும் புத்தருக்கும் இடையேயிருந்த தொடர்புகள் குறித்த பல மரபுக்கதைகள் உள்ளன.இந்த தமிழ் பௌத்தக் கோயில், சக்தி பீடமான நாயினாதீவு நாகபூசனி அம்மன் கோயிலுக்கு மிக அண்மையில் உள்ளது.நாகா என்ற சொல் சில துவக்கக்கால குறிப்புகளில் நாயா என நாகனிகாவில் குறிப்பிடுவதுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 150 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுகிறது.குண்டூர் மாவட்டம் அமராவதிக்குரிய தமிழர் சிற்ப மரபுகளுடன் அமைந்த வல்லிபுரம் புத்தர் சிலையானது வல்லிபுரத்தில் ஒரு இந்துக் கோயிலின் கீழே அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ்- பிராகிருத மொழியில், சாதவாகன மரபின் ஆட்சிகாலத்திய ஆந்திரக் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களோடு ஒத்தவையாக அமைந்துள்ளன.சாதவாகன மரபின் 17 வது மன்னனான ஹல்லா (ஆட்சியில் 20-24 ) இத்தீவின் இளவரசியை மணந்தான். பீட்டர் ஸ்லாக் எழுத்தின்படி, "வல்லிபுரம் ஒரு தொல்லியல் சிறப்புவாய்ந்த இடமாகும். இது முதல் நூற்றாண்டில் ஒரு சிறந்த வணிகத்தலமாக இருந்துள்ளது. […] வல்லிபுரம் சிலையின் கல்லை ஆராயும்போது இதன் காலம் கி.பி 3-4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அக்காலத்திலத்தில் அமராவதியில் கிடைத்த புத்தர் சிலையின் மாதிரியைக் கொண்டு உருவாக்கப்பட்டது."இங்கே கிடைத்த புத்தர் சிலையை 1906 இல் அப்போதைய பிரித்தானிய ஆளுநர் ஹென்றி பிளேக் தாய்லாந்து மன்னருக்கு வழங்கினா்.நாகப்பட்டினம் போன்று வல்லிபுரமும் அக்காலத்தில் கடற் பயணிகளும் வணிகர்களும் தங்கி செல்லக்கூடிய இடமாக இருந்தது. புத்த மற்றும் இந்து மதத்தினருக்கு புனித தலமாகவும் இருந்தது. நாகப்பட்டினம், வல்லிபுரம் ஆகிய இரண்டு இடங்களும் சீனா, சாயாம், கம்போடியா, சம்பா (வியட்நாம்) மற்றும் ஜாவா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன.கந்தரோடை தலத்தில் அருகருகே அமைந்திருந்த பல தாதுகோபங்கள் தமிழ் பிக்குகள் வாழும் மடங்களாயிருந்தன என்பது, யாழ்பாண தமிழர்கள் மற்றும் பழந்தமிழக மக்களிடையே முதல் சில நூற்றாண்டுகளில் இந்து மதம் எழுச்சிபெறும் காலத்திற்கு முன்புவரை மகாயான பௌத்தம் புகழ்வாய்ந்ததாக செல்வாக்கு செலுத்தி வந்ததற்கு சான்றாக அமைகிறது.
திரிகோணமலை--
திரியாய் பகுதியைத் தாலமியின் இரண்டாம் நூற்றாண்டு வரைபடம் தலகாரி (Thalakari) என குறிப்பிடுகிறது. கிருத்துவத்துக்கு முந்தையகால -பெளத்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக கருதப்படுகிறது. திரியாய் கிராமம் இடைக்காலத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவான ஒரு முதன்மை கிராமமாகும். இத் தளத்தில் தமிழ் பௌத்தம் செழித்திருந்த காலத்தில் வழிபாடு செய்யப்பட்ட மகாயான புத்த வழிபாட்டுத் தலங்களின் இடிபாடுகள் உள்ளன. முதலாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சி செய்த, 7-8 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்த பல்லவ கிரந்த கல்வெட்டுகள் திரியாய் கிராமத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கல்வெட்டுகளில் தமிழ்நாட்டு வணிகர்கள் மற்றும் மாலுமிகள் திருகோணமலைக்கு வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.[12] மேலும் இங்குள்ள பெளத்த தெய்வமான அவலோகிடிஸ்வரா மற்றும் அவரது துணைவியார் தாரா ஆகியோருக்கான கோயில் தமிழ்நாட்டிலிருந்து வந்த வணிகர்களால் அளிக்கப்பட்டது என்பதும் இதில் குறிக்கப்பட்டுள்ளது இங்கு கிடைத்த துவாரபாலகர் சிற்பங்கள் பல்லவ கலைப் பள்ளியில் பயின்றவர்களின் படைப்புகளாக உள்ளன.
சோழர்கள் தமிழர்கள் மத்தியில் சைவம், வைணவம், பௌத்தம் ஆகிய பல மதங்களை ஆதரித்தனர். அவர்கள் "பெரும்பள்ளி" எனப்படும் புத்தக் கோயில்களைக் கட்டினர். பெரியகுளத்தில் புகழ்வாய்ந்த இராஜராஜபெரும்பள்ளியை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். சோழர்கள் சைவத்திற்கு முதன்மையளித்து திருகோணமலையின் திருக்கோணேச்சரம் சிவன் கோவில் உட்பட்ட பல கோயில்களைப் பாதுகாக்க தங்களது பங்களிப்பாக திருகோணமலை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணம் அனுப்பினர் என்பது கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.
தமிழகத்தில் பௌத்தமும், பௌத்த தமிழ் இலக்கியம்--தமிழகத்தில் எழுந்த பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகை பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள், இரண்டாம் வகை பிற சமயத்தார் படைத்த பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள் என்று பிரிக்கலாம்.
பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள்--பௌத்த மதத்ததைத் தழுவியவர்களால் பௌத்த சமயப் பதிவுகளை வெளிப்படுத்த எழுதப்பெற்ற நூல்களைப் பௌத்த சமயம் சார்ந்த நூல்கள் என்ற வகையில் அடக்கலாம். அவ்வகையில் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம், சிந்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை, மானஓர்ப்பதிகம், அபிதம்மாவதாரம் ஆகியன அடங்கும்.
மணிமேகலை--
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையே பௌத்த சமயம்சார் நூல்களில் முக்கியமானதும், தலைமையானதும் ஆகும். மணிமேகலைக் காப்பியத்தின் கதையமைப்பின்படி மணிமேகலை என்ற சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் பெண் துறவு நிலை பெற்று ஞானம் என்ற உயர்நிலையை அடையச் செய்யும் நிலையில் படைக்கப்பெற்றுள்ளது. மணிமேகலை துறவு மேற்கொண்டது மட்டுமில்லாமல் தன்னோடு வாதம் புரிய வந்த பல சமயத்தாரையும் மதித்து அவர்கள் கருத்தைக் கேட்டறிந்து தன் பௌத்த சமயக் கருத்தை அவர்களின் முன்னிலையில் உயர்த்துகிறாள் என்பது பௌத்த சமயத்திற்குக் கிடைத்த பெருவெற்றியாகின்றது.மணிமேகலைக் காப்பியத்தில் புத்தர் வரலாறு இடம்பெறுகிறது. பௌத்த தருமம் பற்றிய பல செய்திகள் இடம்பெறுகின்றன. மணிமேகலைக் காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார் புத்தரின் பாதப் படிமைகள் காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த உவனத்திலும், இலங்கையில் உள்ள சமந்தம் என்ற மலையிலும் இருந்ததாகக் குறிக்கிறார். மணிமேகலா தெய்வம் புத்த பீடிகையை வணங்கிப் புத்தரைப் பாரட்டுகிறது.
"உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பெர்ளர் வழக்கு செவித்துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க
சுடர்வழக்கு அற்றுத் தடுமாறும் காலைஓர்
இன வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ்வாசனம்
நாமிசை வைத்தேன், தலைமிசை கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம் அறுக" (மணிமேகலை.10: 7-15)
என்று புத்தபிரான் தோன்றிய சூழல், அவரைப் பௌத்தர் பணியும் திறம் ஆகியவற்றை அறிந்து கொள்ள மணிமேகலை காப்பியம் வழியாக வகை செய்கிறார் சாத்தனார்.என்று புத்தபிரான் தோன்றிய சூழல், அவரைப் பௌத்தர் பணியும் திறம் ஆகியவற்றை அறிந்து கொள்ள மணிமேகலை காப்பியம் வழியாக வகை செய்கிறார் சாத்தனார்.பௌத்தம் தலையாயதாகக் கருதிய துக்க நிவாரணத்தையும் மணிமேகலைக் காப்பியம் மொழிகின்றது.
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது " (மணிமேகலை.2: 64-67)
என்று துக்கம் பற்றியும் துக்க நிவாரணம் பற்றியம் துக்கமின்மை பற்றியும் மணிமேகலை காப்பியத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகின்றது.மணிமேகலைக் காப்பியம் சிலப்பத்திகாரக் காப்பியத்தின் தொடர்ச்சியாக அமைந்த காப்பியமாகும். இதன் காரணமாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் கொள்ளப்பெறுகின்றன. காப்பியக் கதைத் தொடர்பு இவ்விரு காப்பியங்களையம் இரட்டைக் காப்பியங்களாக எண்ண வைக்கிறது. மணிமேகலைக் காப்பியம் கச்சி என்ற காஞ்சிபுரம் நோக்கி மணிமேகலையைச் செலுத்துவதால் காஞ்சிபுரத்தில் பௌத்தம் செழித்த காலத்தில் அது எழுதப்பெற்றிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் முடிகின்றனர். பௌத்த அறிஞர்களான திக்நாகர், தருமகீர்த்தி ஆகியோர் காஞ்சிபுரத்தில் இருந்த காலத்தில் மணிமேகலை எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்று வானமாமலை கருதுகின்றார்.
மணிமேகலை முப்பது கதைகளைக் கொண்டு ஆசிரியப்பாவினால் எழுதப்பெற்ற சமயக் களஞ்சியம் ஆகும். இதன்வழி பௌத்த சமயக் கருத்துகளையும் தமிழகத்தில் மணிமேகலை எழுதப்பெற்ற காலத்தில் நிலவிய சமயங்களின் நிலைகளையும் அறிந்துகொள்ளமுடிகின்றது.
குண்டலகேசி--
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி பௌத்த சயம நூலாகும். இதனை இயற்றியவர் நாதகுத்தனார் ஆவார். இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. தற்போது ஒரு நூறு பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இக்காவியத்தின் கதை பல திருப்பங்களைக் கொண்டது.இராச கிருகம் என்ற நகரத்தைத் தலைமையாக வைத்து அரசாண்ட அரசனுக்கு மந்திரி ஒருவர் இருந்தார். அவரின் மகள் பத்திரை ஆவாள். இப்பத்திரை ஆவண நகரத்தில் வாழ்ந்த வணிகரின் மகள் என்ற கருத்தும் உளது. இவள் ஓர் இளைஞனைக் காதலித்தாள். அவன் அரசனால் குற்றவாளியாகக் கருதப்பெற்றவன் என்ற போதிலும் அவனை அக்குற்றத்திலிருந்து விடுவிக்கிறார் அமைச்சர். அதன்பின் அவனைத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இவர்கள் இருவருக்கும் ஊடல் வந்தது. ஊடல் வளர்ந்து பெரிதாகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய எண்ணுகின்றனர். இதில் பத்தரை கணவனை முற்றிலும் பிரிந்துவிடும் அளவிற்குச் சென்றுவிடுகிறாள். இதன் காரணமாக அவளுக்கு உலக வாழ்வின்மீது வெறுப்பு தோன்றுகிறது. அவள் சமண சமயத்தில் இணைந்து துறவியாகிறாள். சமண சமயக் கருத்துகளை அவள் பரப்பி வந்தாள். மற்ற சமயத்தாருடன் வாதம் செய்து வெற்றி பெற்றாள்.பத்தரை தன் தலையை மழித்துக் கொண்ட போதிலும் சுருள் சுருளாக அவளின் தலைமுடி வளர்ந்தது. இதன் காரணமாக அவள் குண்டலகேசி எனப்பட்டாள். குண்டலகேசி என்றால் குண்டலம் போன்று வளைந்து சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள். அதுவே அவளின் பெயராக மக்கள் வழங்கினர். இதுவே காப்பியத்தின் பெயராகவும் ஆனது. இந்நிலையில் ஊர் ஊராகச் சென்று சமண சமயத்தை அவள் பரப்பி வந்தாள்.
இந்நிலையில் ஓர் ஊருக்குச் சென்றபோது அங்கு சமயவாதம் புரிவதற்காக நாவல் கிளை ஒன்றை நட்டுவிட்டு அவள் தனக்கான உணவைத் தேடி பிச்சைப் பாத்திரம் ஏந்திப்புறப்பட்டாள். அப்போது அவ்வூருக்குப் புத்தர்பிரானும் தன் சீடர்களுடன் வருகை புரிந்து இருந்தார். புத்தரின் சீடர்களுள் ஒருவரான சாரி புத்தர் என்பவர் குண்டலகேசி நட்ட நாவல் மரத்தின் அருகே வந்தார். அங்கு வந்து அங்கிருந்த சிறுவர்களிடம் அந்நாவல் மரத்தைப் பிடுங்கிடச் செய்தார். அந்நேரத்தில் குண்டலகேசி வர சாரி புத்தருக்கும் அவளுக்கும் சமயவாதம் நடைபெற்றது. இவ்வாதத்தில் குண்டலகேசி கேட்ட வினாக்களுக்குச் சாரிபுத்தர் விடைதருகிறார். ஆனால் சாரி புத்தர் வினவிய வினாக்களுக்குக் குண்டலகேசியால் விடையிறுக்க இயலவில்லை. இதன் காரணமாக அவள் சாரிபுத்தரைச் சரண் அடைந்தாள். அதற்குச் சாரி புத்தர் என்னைச் சரணடைய வேண்டாம். புத்தரைச் சரணடைக என்று கூறி அவளைப் புத்தரிடம் அழைத்து வருகிறார். புத்தரை வணங்கிப் பௌத்த மதம் சார்கிறாள் குண்டலகேசி. இதுவே இக்காப்பியக் கதையாகும்.இக்காப்பியத்தில் பௌத்த சமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவையடக்கமாக வரும் பாடலில் புத்தபெருமான் பெருமை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.
"நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார்
போய்க்குற்றமூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென்
வாய்க்குற்றசொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே"
நோயாளிகள் மருந்தின் சுவை பற்றிக் கவலைப்படாது தன் நோய்தீர அதனை உண்பர். குளிரில் நடுங்குபவர்கள் புகையை ஏற்றுக்கொண்டு தீயை வரவேற்பார்கள். அரச வாழ்வைத் துறந்து மூவகைக் குற்றங்களை நீக்கிய புத்த பெருமான் தாள் பணிந்தவர்களுக்கு எக்குற்றமும் வாராது. மேலும் அவர்கள் அறியாமை நிலையில் இயல்பாகச் சொற்களைச் சொன்னாலும்கூட அவை குற்றம் உடையனவாக அமையாது என்பது அவையடக்கப்பாடலின் பொருளாகும். இதில் புத்த பெருமானின் பெருமை, செல்வத் துறப்பு எண்ணப்பெற்றுள்ளது.
வீரசோழியம்---
ஐவகை இலக்கணங்களைக் கூறும் நூலுள் ஒன்று வீரசோழியம் ஆகும். இது பொன்பேத்தி என்ற ஊரைச் சார்ந்த புத்திமித்திரனால் இயற்றப்பெற்றது. வீரராசேந்திர சோழன் காலத்தில் இந்நூல் இயற்றப்பெற்றுள்ளது. இவன் பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தவன். தான் நூல் எழுத உதவி செய்த வீரராஜேந்திரன் பெயரையே இந்நூலுக்குப் புத்தமித்திரன் சூட்டியுள்ளார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அலங்காரம் ஆகிய பெரும் பகுப்புகளை உடையது. எழுத்ததிகாரத்தில் சந்திப்படலம் மட்டும் உட்பிரிவாக உள்ளது. சொல்லதிகாரத்தில் வேற்றுமைப்படலம், உபகாரகப்படலம், தொலகைப்படலம், தத்திதப்படலம், தாதுப்படலம், கிரியாபதப்படலம் ஆகியன இடம்பெற்றுள்ளன. பொருளதிகாரத்தில் பொருட்படலம் மட்டும் உள்ளது, யாப்பதிகாரத்தில் யாப்புப்டலமும், அலங்காரத்தில் அலங்காரப்படலமும் உள்ளன.
இந்நூலின் கடவுள் வாழ்த்து மிகத்தெளிவாக இந்நூல் பௌத்தசமயம் சார்ந்தது என்பதை உரைக்கிறது.
"மிக்கவன், போதியின் மேதக் கிருந்தவன், மெய்த்தவத்தால்
தொக்கவன், யார்க்குந் தொடரவொண் ணாதவன், தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே."
என்ற இக்கடவுள் வாழ்த்தில் போதி மரத்தடியில் இருந்த புத்தபிரான் மெய்த்தவத்தால் மேன்மைப்பட்டவர். யாராலும் தொடர முடியாத இயல்பினைப் பெற்றவன். தூயன். அத்தக்கவன் பாதத்தைத் தலைமேல் வைத்துத் தமிழுரைக்கிறேன் என்று புத்தமித்திரன் குறிக்கிறார். இந்நூலில் பௌத்தர் அணியும் துவராடை, பௌத்த மரபுகள் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இந்நூலுக்குப் பெருந்தேவனார் உரை வரைந்துள்ளார். இவரின் உரையில் எடுத்தாளப்பெற்றுள்ள பல பாடல்கள் பௌத்த சமயம் சார்ந்தனவாக உள்ளன.
சித்தாந்தத் தொகை---
சித்தாந்தத் தொகை என்ற பெயரில் ஒரு பௌத்த நூல் இருந்ததாகத் தெரியவருகிறது. இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. காலம் முதலானவையும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்ற சைவ சாத்திரநூலுக்கு ஞானப்பிரகாசர் என்பவர் உரை வரைந்துள்ளார். அவ்வுரையில் இந்நூலின் ஒரு பாடலைத் தருகிறார். சௌத்திராந்திகன் மதம் என்பதற்கு உரிய நூலாகச் சித்தாந்தத் தொகை அவரால் காட்டப்பெற்றுள்ளது,
"அருணெறியாற் பாரமிதை ஆறைந்தும் உடன் அடக்கி
பொருள்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவர்தன்
அருண்மொழியால் வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ."
என்பது சித்தாந்தத் தொகை பாடலாகக் கொள்ளப்படுகிறது. இந்நூல் பற்றிய குறிப்பு நீலகேசியின் உரை வழியாகவும் கிடைக்கின்றது. “மருடரு மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே- என்பது சித்தாந்தத் தொகை” என்று நீலகேசி, புத்தவாதச்சருக்கம் 64-ஆம் பாட்டின் உரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவ்வளவே இந்நூல் பற்றிக் கிடைக்கும் செய்திகளாகும். இந்நூல் புத்த சமய நெறிகளான கொல்லாமை, புலாலுண்ணாமை, பொய்யாமை போன்றவற்றை விளக்கி நிற்கும் நூலாகும்.என்பது சித்தாந்தத் தொகை பாடலாகக் கொள்ளப்படுகிறது. இந்நூல் பற்றிய குறிப்பு நீலகேசியின் உரை வழியாகவும் கிடைக்கின்றது. “மருடரு மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே- என்பது சித்தாந்தத் தொகை” என்று நீலகேசி, புத்தவாதச்சருக்கம் 64-ஆம் பாட்டின் உரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவ்வளவே இந்நூல் பற்றிக் கிடைக்கும் செய்திகளாகும். இந்நூல் புத்த சமய நெறிகளான கொல்லாமை, புலாலுண்ணாமை, பொய்யாமை போன்றவற்றை விளக்கி நிற்கும் நூலாகும்.
திருப்பதிகம்--
புத்தரைப் பற்றிய தோத்திர நூலாக திருப்பதிகம் என்ற நூல் விளங்கியிருக்கலாம். இதனை எழுதியவர் பற்றிய அறியக் கிடைக்கவில்லை. இதன் காலமும் தெரிந்தில. சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரைவழியாக இந்நூல் பற்றிய செய்தி கிடைத்தது.
"எண்ணிகந்த காலங்கள் எம்பொருட்டான் மிகஉழன்று
எண்ணிகந்த காலங்கள் இருள்தீர ஒருங்குணர்ந்தும்
எண்ணிகந்த தானமுஞ் சீலமு இpவையாக்கி
எண்ணிகந்த குணத்தினா எம்ம்பெருமா னல்லனோ"
என்ற பாடலைத் திருப்பதிகப் பாடலாக ஞானப்பிரகாசர் குறிக்கிறார். நீலகேசியின் உரையிலும் இந்நூல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வுரையில் மற்றொரு பாடலும் தரப்பெற்றுள்ளது.
"என்றுதான் உலகுய்யக் கோளெண்ணினான் அதுமுதலாச்
சென்றிரந்தார்ககு ஈந்தனன் பொருளுடம்பு உறுப்புக்க
டுன்றினன் பிறக்குநன் உளனாயின் மாமேருக்
குன்றியின் துணையாகக் கொடுத்திட்டான் அல்லனோ"
என்பது நீலகேசி உரையால் கிடைக்கும் திருப்பதிகப் பாடலாகும்.
விம்பசார கதை---
நீலகேசி உரையினால் விம்பசாரன் கதை என்ற பௌத்த நூலும் இருந்ததாக அறியப்பெறுகிறது. சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரையிலும் இந்நூல் பற்றிய குறிப்பு காணப்பெறுகிறது. விம்பசாரன் என்பவன் ஓர் அரசன். அவன் பௌத்த மதத்தைத் தழுவியவன் ஆவான். அவனது வரலாற்றை உரைப்பது விம்பசாரன் கதை என்பது உறுதி.
கிறிஸ்து பிறப்பதற்கு ஐநூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு விம்பசாரன் என்ற அரசன் இராசகிருகம் என்பதைத் தலைநகராக் கொண்டு அரசாட்சி செய்துவந்தான். இவரின் நாட்டைக் கடந்து ஞானத்தைத் தேடி கௌதமர் சென்றுகொண்டிருந்தார். இவரைக் கண்ட விம்பசாரன் இவரைத் தன்னுடன் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் கௌதமர் தான் ஞானத்தைத் தேடிச் செல்வதாகவும், ஞானத்தை அடைந்தபின் விம்பசார அரசனைக் காண வருவதாகவும் சொன்னார். விம்பசாரனும் அவரின் ஞானப் பயணத்திற்கு வழி தந்தான்.
கௌதமர் ஞானம் பெற்றுப் புத்தரானார். இராச கிருகத்துக்கு விம்பசார அரசனைக் காண வந்தார். அரசன் மிக மகிழ்ந்து அவரின் ஞான உரை கேட்டு அவரின் சீடன் ஆனான். புத்தருக்கும் அவரின் சீடர்களுக்கும் விருந்தளித்து அவர்கள் தங்கியிருக்க வெளுவனம் என்ற வனத்தை வழங்கினான்.
இந்நிலையில் விம்பசார மன்னனுக்கு அஜாத சத்ரு என்ற மகன் இருந்தான். இவன் தனக்கென தனியறிவு பெற்றவன் அல்லன். சொல்வார் பேச்சைக் கேட்டு நடப்பவன். கௌதம புத்தரது தாய் மாமன் வழியில் உறவாக அமைந்தவன் தேவதத்தன். அவனுக்கு கௌதமர் மீது பெறாமை. அவரின் உயர்நிலையைத் தான் அடையவேண்டும் என்று அவன் யோசித்தான். இதற்கு அஜாத சத்ருவை இணைத்துக்கொண்டான். அரசனிடம் இருந்து அரசாட்சியை அஜாத சத்ரு மூலம் பெறுவது. அதனோடு புத்தரையும் அழித்துத் தான் பௌத்த சங்கத்தின் தலைமையைப் பெறுவது என்பது அவர்களின் திட்டம்.
அஜாதசத்ருவின் ஆசையை அறிந்த மன்னன் விம்பசாரன் அவனுக்கு அரசாட்சியை வழங்கினார். தேவதத்தனின் ஆலோசனைப்படி அரசாட்சி மட்டும்போதாது அரசனையும் அழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அதுவும் நிறைவேறியது. நிறைவேறும் நேரத்தில் அஜாத சத்ருவிற்கு ஒரு மகன் பிறந்தான். தனக்கு மகன் பிறந்து தான் தந்தை நிலையைப் பெற்றபின் அஜாத சத்ருவின் தன் தந்தையின் இன்றியமையாமை புரிந்தது. தன் தவறை அவன் உணர்ந்துத் திருந்தினான். அவன் பௌத்த மதம் சார்ந்தான். தேவதத்தனின் திட்டமும் நிறைவேறவில்லை. இதுவே இப்படைப்பின் கதையாகும்.
இப்படைப்பின் ஓர் பாடல் மட்டும் கால வெள்ளத்தில் அழியாமல் கிடைக்கிறது. அப்பாடல் பின்வருமாறு.
"‘ உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்
ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்."
உலும்பினி என்பது மாயதேவி புத்தரைப் பெற்றெடுத்த வனமாகும். இவ்வரலாற்றை இக்கதை எடுத்துரைத்துள்ளது.
மானாவூர்ப்பதிகம்-----
நீலகேசி காப்பியத்திற்கு வாமன முனிவர் வரைந்த உரையின் வாயிலாக மானாவூர்ப் பதிகம் என்ற பௌத்த நூல் இருந்ததாகத் தெரியவருகிறது. நீலகேசி உரையில் இந்நூலில் உள்ள ஒரு பாடல் எடுத்தாளப்பெற்றுள்ளது.
"வானாடும் பரியாயும் அரிணமாயும்
வனந்கேழற் களிறாயும் எண்காற் புள்மான்
தானாயும் பணை எருமை ஒருத்தலாயும்
தடக்கையிளங் களிறாயும் சடங்கமாயும்
மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
மயிலாயும் புறவாயும் வெல்லும் சிங்க
மானாயும் கொலை களவு பொய் காமம்
வரைந்தவர் தாம் உரைத்த பதி மானாவூரே"
என்பது மானாவூர் பதிகப் பாடலாகும். இதில் புத்த பெருமானின் கருணை எடுத்தியம்பப் பெறுகிறது.
அபிதம்மாவதாரம்----
புத்த நந்தரால் எழுதப்பெற்ற பௌத்த நூல் அபிதம்மாவதாரம் என்பதாகும். இது சுமதி என்ற பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பெற்றதாகும். புத்தரின் அவதாரச் சிறப்பினை எடுத்துரைக்கும் நூல் இதுவாகும். இந்நூலும் தற்போது கிடைக்கவில்லை.
இவை தவிர தற்கால நிலையில் பெயரளவில் மட்டுமே அறியப்படுகிற பௌத்த நூல்கள் சிலவும் தெரியவருகின்றன. ஆசாரிய புத்த தத்த மகோதரர் என்பவர் மதுராத்த விலாசீனி, வினய வினவிச்சயம், உத்தரவினிச்சயம், ஜினலங்காரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆசாரிய தருமபாலர் என்பவர் பரிமார்த்த மஞ்ஜீஸா, நெட்டிய கரணத்தகதா, பரமார்த்த தீபனீ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அநுருத்தர் ஆயிரம் மாத்த சங்கிரகம், பரமார்த்தாவினிச்சயம், நாமரூபப் பரிச்சேதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். காபசதெரர் என்பவர் மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதி வினோதினி, அநாகத வம்சதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவ்வாறு பௌத்த சமய நூல்கள் பலப்பல தோன்றியுள்ளன. இவை அனைத்தும் கால வெள்ளத்தில் கிடைக்காமலிருப்பது இந்தியத் தத்துவமெய்யியலுக்குக் குறையே ஆகும்.
பிற சமயத்தார் படைத்த பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள்
நீலகேசி, சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் இவ்வரிசையில் கொள்ளத்தக்கன. இந்நூல்கள் பௌத்த சமயக் கருத்துகளை மறுத்துத் தம் கொள்கைகளை நிலைநிறுத்துவனவாகும். இருப்பினும் இந்நூல்கள் எழுந்த காலத்தில் நிகழ்ந்த பௌத்த சமய நிலையை அறிந்து கொள்ள இவை துணை செய்கின்றன.
நீலகேசி---
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றாக அமைவது நீலகேசி ஆகும். இதனை இயற்றியவர் யார் என அறியப்படவில்லை. இது பத்துச் சருக்கங்களை உடையது. 895 பாடல்களை உடையது. இது குண்டலகேசிக்கு எதிராக எழுந்த காப்பியம் என்றே கருதப்படுகிறது. பாஞ்சால் நாட்டில் இருந்த சமண முனிவர் முனிச்சந்திரருக்கும் நீலிப் பேய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலே காப்பியமாக படைக்கப்பெற்றுள்ளது. சமண மதமே இதில் வெல்கிறது. இதனுள் அமைந்துள்ள குண்டலகேசி வாதச் சருக்கம், புத்த வாதச் சருக்கம் ஆகியன பௌத்தக் கருத்துகளைக் கொண்டுள்ளன. இதனுள் குண்டலகேசியின் நூறு பாடல்கள் அறிமுகம் செய்யப்பெறுகின்றன. நூறு பாடல்களின் முதற்குறிப்பு தரப்பெற்று குண்டலகேசியின் வாதங்கள் மறுக்கப்பெறுகின்றன. இதன் காரணமாக குண்டலகேசி மறைந்தாலும் அந்நூலில் இருந்த பௌத்த சமயப்பாடல்கள் இவை என அறிந்துகொள்ள முடிகின்றது
"ஆதிதான் பெரியனாய் அறங்கெடும் அளவுஎல்லாம்
ஊதியமே உணர்ந்தவன் உனுறுதருமமே உரைத்தான்
யாதனையுந் தான்வேண்டான் அயலார்க்கே துன்புற்றான்
போதியான் எம்இpறைவன் பொருந்தினார் உயக்கொள்வான். (176)"
என்ற நிலையில் பௌத்த மதக் கருத்துகளுக்கு இடமளித்துள்ளது நீலகேசியைத் தொடர்ந்து சைவ சமயத் திருமுறைகளில் பௌத்தசமயக் கருத்துகள் இடம்பெறுகின்றன. சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் போன்ற பலரும் பௌத்த சமயக் கருத்துகளைக்காட்டி அவற்றின் மெய்த்தன்மையை விமர்சித்துள்ளனர். திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாடலிலும் சமண பௌத்த மறுப்பை வெளியிடுகிறார். மேலும் புத்தரின் வேறுபெயர்கள், புத்த மதத்தோரின் வேறுபெயர்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள் ஆகியனவும் சம்பந்தரால் விமர்சிக்கப்பெற்றுள்ளன. மாணிக்கவாசகர் பௌத்தரை வாதில் வென்று இலங்கை மன்னின் வாய் பேச இயலா மகளைப் பேசவைத்தும் சைவத்தை நிலைநாட்டினார் என்று திருவிளையாடற்புராணம் குறிக்கிறது. சேக்கிழாரும் பெரிய புராணத்தில் பௌத்த சமயக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். சைவ சமய சாத்திர நூல்களில் பௌத்த சமயக் கொள்கைகள் விவாதிக்கப்பெற்றுள்ளன.
சிவஞான சித்தியார்--
சித்தாந்த சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்று அருள் நந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் என்பதாகும். இது சுபக்கம், பரபக்கம் என இரு பகுதிகளை உடையதுஇ சுபக்கம் என்பது அருள் நந்தி சிவாசாரியார் ஏற்ற சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை விளக்கமாக அமைவது. பரபக்கம் என்பது தான் கொண்ட சைவ சித்தாந்த கொள்கையை ஒரு புறத்தில் வைத்துக்கொண்டு மற்றொரு புறத்தில் வேறு சமயக் கொள்கைகளை வைத்து உண்மை நியாயம் காண்பதாகும். இதில் புத்த சமயத்தின் நான்கு வகைகள் எடுத்துக்காட்டப்பெற்று அவை சைவ சித்தாந்த நோக்கில் ஆராயப்பபெறுகின்றன.
வைபாடிகள். மாத்துமிகள், சௌத்திராந்திகன், யோகசாரர் என்ற நால்வகைப் பிரிவாக சிவஞான சித்தியார் நூல் எழுந்த காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் விளங்கியிருந்தது. இந்நால்வகையின் சமயக் கருத்துகளையும் எடுத்துக்காட்டி அவற்றை மறுக்கிறார் அருள்நந்தி சிவாசாரியார்.
"நீதியார் வேதநூலின் நெறியலா அறங்கள் நாளும்
ஒதிஓர் ஐந்துசீலம் உடையராய் உடலம் மூடிப்
போதி நீள் மரத்தின் மேவு புத்தர்நால்வரினும் வைத்துச்
சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந்திகன்முன் சாற்றும்"
என்று அருள்நந்தி சிவாசாரியர் புத்த மதக் கொள்கைகளை விவரிக்க ஆரம்பிக்கின்றார். வேத அடிப்படை ஏற்காத அவைதிக சமயம் பௌத்தம் என்பதை முதலடியிலேயே குறிப்பிட்டுவிடுகிறார் அருள்நந்திசிவாசாரியார். மேலும் ஐந்து சீலம், துவராடை போதி மரத்தைத் தெய்வமாக வணங்கல் போன்ற பௌத்த இயல்புகள் சிவஞான சித்தியாரில் காட்டப்பெற்றுள்ளன. சிவஞான சித்தியாரில் புத்த ஜாதகக் கதைகளின் சாரம் விவரிக்கப்பெறுகின்றது. இந்நான்கு மதங்களையும் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு அவற்றின் மறுதலையாக தன் கொள்கையை நிறுத்தும் போக்கில் சித்தியார் அமைகிறது.
பிற்காலத்தில் பௌத்த சமய எழுச்சி--
கி.பி 11 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு பௌத்தம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் உட்பகை என்று குறிக்கப்பெறுகிறது. இந்தியாவில் 1864 ஆம் ஆண்டு வாக்கில் அநாகரிக தர்மபால என்பவர் பௌத்தத்தை மீட்சி அடையச் செய்தார். இந்திய மகாபோதி சங்கம் என்ற ஒன்றை அவர் நிறுவினார். சிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் அநாகரிக தர்மபால பௌத்த சமயம் பற்றி உரையாற்றினார். இதே மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றினார் என்பதும் குறிக்கத்தக்கது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பிற்கால பௌத்த எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவர், க. அயோத்திதாசர். இவர்1898 ஆம் ஆண்டு வாக்கில் இலங்கை சென்று பஞ்ச சீலம் பெற்று பௌத்தரானவர். இவர் இராயப்பேட்டையில் தென்னிந்திய சாக்கிய புத்த சங்கத்தை நிறுவிப் பௌத்தத்தொண்டாற்றினார். அயோத்திதாசர் பௌத்த நெறிக் கொள்கைகளை விளக்கும பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்திரர் தேச சரித்திரம், இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம், சாக்கிய முனிவரலாறு, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி, புத்த மார்க்க வினா விடை, புத்தரது ஆதி வேதம் என்பன அவர் படைத்த நூல்கள் ஆகும். பௌத்த கருத்துக்களைப் பரப்ப தமிழன் என்ற வார இதழையும் இவர் நடத்தி வந்தார்.
பெளத்தர்கள் அறம், நீதி, மெய்யியல், மொழியியல், மருத்துவம் போன்ற பல துறைகளில் தமிழில் ஆக்கங்கள் தந்துள்ளார்கள். இன்று தமிழரின் விழுமியங்கள் பல இந்த இலக்கியத்தின், சமூக பண்பாட்டின் தாக்கத்தினால் செதுக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு--
அருண்
No comments:
Post a Comment